Monday, January 31, 2011

தர்ம சங்கட நேரங்கள்.


தர்ம சங்கட நேரங்கள்.
என் நண்பன் ஒருவன் ஏதாவது சிரிப்பு வெடி தெளித்துக்கொண்டே இருப்பான்....எதையும் எளிதாக்கி மனச் சுமைகளை ஓட்டி விடும் நுட்பம் கைவந்தவன். 
பெயர்: சாலா ஆஸ்கர் .
இடம் : அசாவியா, லிபியா.
பருத்த உடலுடன் குண்டு முகத்தில் சிரிப்பை அடக்கி அவன் நிதானமாய் ஜோக் அடிக்கும்போது யாராலும் அவன் வலையில் விழாமல் இருக்க முடியாது.
சில விஷயங்களில் அவனுக்கு உடன்பாடில்லை என்றால் அதை நாசுக்காக அவன் சமாளிக்கும் விதமே தனி.
ஒரு  சமயம் நாங்கள் பேசிக்கொண்டிருக்கும் போது மற்றொரு நண்பன் சாலா விடம்
''
சாலா, உன் கார் சாவியைக் கொஞ்சம் கொடு. சில மணியில் திரும்பி வந்துவிடுவேன்.'' என்றான்.
சாலாவுக்கு காரைக் கொடுக்க விருப்பமில்லை என்பது அவன் முகத்திலிருந்து தெரிந்தது.
அவன் சொன்னான் :
''
என் அப்பாவைக் கேட்காமல் நான் காரை யாரிடமும் தருவதற்கில்லை. மன்னிக்க வேண்டும்.
உனக்கு அவசரமாய் drop செய்ய வேண்டும் என்றால் சொல். இன்னும் சில நிமிஷத்தில் நானே வருகிறேன் drop செய்ய.''அந்த நண்பன் '' பரவாயில்லை, வேண்டாம் . நான் வேறே வழி பார்த்துக்கொள்கிறேன் '' என்று நகர்ந்தான்.
சாலா வின் இந்த லாவகமான பதில் என்னைக் கவர்ந்தது.
''
சாலா, காரைக் கொடுக்க முடியாது என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்லாமல் அதை நீ சமாளித்த விதம் எனக்குப் பிடித்தது.
அதுவும் உன் தந்தை மேல் உனக்கு அவ்வளவு மரியாதை இருப்பது பெரிய விஷயம். அவர் சொல்லை அவ்வளவு நெறியோடு கடைப்பிடிக்கிறாயே?''சாலா: '' அப்படியே பழகிவிட்டது.''நான்: '' உன் அப்பா எங்கே வேலை செய்கிறார்? என்ன தொழில்?''சாலா: '' அவர் இப்போது வேலை எதுவும் செய்ய  வில்லை.''பெரும்பாலும் யாருடைய சொந்த விஷயங்களையும் கேட்காமல் இருப்பது என் கொள்கை.
எல்லோருக்கும்  அவரவர் அந்தரங்கம் சொந்த விஷயம். அதில் தலையிடக்கூடாது என்பது நானே எனக்கு விதித்துக்கொண்ட ஒரு கோட்பாடு.
என்னுடைய அந்த விதி முறையை நானே மீருவதுபோல், அதன் விளைவுகளை நினைக்காது அடுத்தக் கேள்வியைக் கேட்டேன்.சில சமயங்களில் மனதைத் தொடும் நெகிழ்வில் நாம் நம்மை மீறி செயல் படுகிறோம். நானும் அதற்கு விலக்கல்ல.
நான்: '' உன் தந்தை retire ஆகி விட்டாரா?''சாலா: '' அவர் ஓய்வு பெற்று பல வருஷங்கள் ஆகி விட்டது. நன்றாக வாழ்ந்தார். இப்போது 'அண்டர் கிரௌண்டில்' இருக்கிறார்.
நான்: '' underground  என்றால்?... புரிய வில்லை.... ஏதாவது தலை மறைவான அரசியல் புரட்சி போல? ....மறைந்திருந்து .....''சாலா: '' அதெல்லாம் இல்லை.நான் சிறுவயதாக இருக்கும் போதே அவர் இறந்து விட்டார்.''

நான் வாயடைத்துப் போனேன்.
மேலே எப்படித் தொடர்வது என்று தயங்கினேன்...
சில சமயம் பேசாமல் இருப்பதே சரி.
சாலாவே நிலைமையை புரிந்து தொடர்ந்தான்...
''
நான் எப்படி என் அப்பாவை கலந்து ஆலோசிப்பேன் என்று நீ நினைப்பது புரிகிறது.
என் தந்தை எப்போதும் என் மனதில் இடம் பெற்றவர். ஏதாவது கேட்க வேண்டுமானால் நான் என் மனதுக்குள் நிறுத்தி, அப்படியே விட்டு விடுவேன்.அவருடைய பதில்  உரிய நேரத்தில் கிடைத்து விடும்.''நான்: '' அது எப்படி உனக்குத் தெரியவரும்? பதில் வந்தது என்று என்று எப்படி புரியும்?''சாலா: ''பழக்கத்தினால் அது புரியும்.சிறு வயதிலிருந்தே அது எனக்கு பழக்கமாகிவிட்டது.''
இன்னமும் எனக்கு அவனுடைய உத்தி மிக சாமர்த்தியமானதாகப் பட்டது.
நட்பை இழக்காமல் சங்கடமான சமயத்தில் சமயோசிதமாய் பதிலளிப்பது சாமர்த்தியம் தானே.
கடவுள் நம் எல்லோருக்கும் அந்த சாமர்த்தியத்தைக் கொடுத்திருந்தும் அதை உபயோகிக்கத் தெரிந்திருக்கவும் சாமர்த்தியம் தேவையாயிருக்கிறது.


No comments:

Post a Comment