Sunday, October 18, 2009

விண்டேஜ் கார்

-->
விண்டேஜ் கார்


''அப்பா உங்களுக்கு மூளை இல்லைங்கறது நிஜமாப்பா?''
திடீர் என்று தன் செல்லக் குழந்தை இப்படிக் கேட்டதும் அப்பா கதி கலங்கிப்போனார்.
''என்ன கொழந்தே இப்படி கேட்கறே ...
அப்பாவை இப்படி மரியாதை இல்லாமல் ... யார் சொன்னது அப்படி?''
''அம்மா தான்''
'', அப்படியா ...எப்போ சொன்னா?''
''நீங்க பழைய காரை வாங்கினபோது சொன்னா''
''அது மெர்செடெஸ் பென்ஸ் காராக்கும் ... எல்லாருக்கும் கிடைக்காது''
''ஆனா ஓடாத கார்  ..... மெர்செடெஸ் ஆனாலும், மாருதி யானாலும் ஓடாத காரால் என்ன உபயோகம்?''
''நம்ம வீட்டில் மெர்செடெஸ் இருந்தால் பெருமை இல்லையா?''
''ஓடாத காருக்கு என்ன பெருமை?''
''உனக்கு அதெல்லாம் புரியாது ... நீ போய் உன் ஹோம் வொர்க் எல்லாம் முடிக்கிற வேலையைப் பார்''

குழந்தைகளுடன் எப்போது கேள்வி பதில் சங்கடமான கட்டத்துக்கு வந்தாலும் ஹோம் வொர்க் தான் கை கொடுக்கிறது.


இந்த உரையாடல் ஆரம்பிக்கும் முன் நடந்த இன்னொரு         முன்-உரையாடல் தான் இதற்கு அஸ்திவாரம்.
குழந்தைகள் எவ்வளவு சமர்த்தாய் விஷயங்களை கிரகித்துக் கொள்கிறார்கள் என்று கவனித்தால் வியப்பாய் இருக்கிறது ....          [ smart என்ற ஆங்கில வார்த்தை சமர்த்து என்னும் தமிழ் வார்த்தையிலிருந்து தான் வந்ததா?]
ஒவ்வொரு தலைமுறையும் முந்தைய தலைமுறையை விட smart தான் பல வகைகளில் ...

அந்த முன்-உரையாடலுக்கு வருவோம்.
அது இந்தக் குழந்தைக்கும் அதன் தாயாருக்கும் நடந்த கேள்வி பதில் ....
''அம்மா, ...தினம் தினம் புதுப் புது காரா வந்துகொண்டே இருக்கே .. எவ்வளோ கார் ....பெரிசு சின்னது .... எவ்வளோ கலர்லே ....''
''ஆமாம், ஆயிரக்கணக்கில் ... ஏன் ... லட்சக்கணக்கில் வந்து தெருவிலே ஒட்டவே இடமில்லாமல் திண்டாடறாங்க!  ... ஏன் கேட்கறே?''
'' இவ்வளோ வருஷமா கார் பண்ணறாங்களே ... பழசானா என்னவாகும்?''
''பழசானா ஓடாது .... மனுஷங்க மாதிரி தான் ... ஓடாமல் நின்னு மத்தவங்க உயிரை எடுக்கும்''
''மனுஷங்க ஓடாம நின்னுட்டா அவங்க செத்துப் போய்ட்டாங்கன்னு cemetary கொண்டுபோய் புதைச்சுடறாங்க,
கார் செத்துப் போனா என்ன பண்ணுவாங்க?''
இதுபோல் விசித்திரமான கேள்விகள் குழந்தைகளுக்கு எளிதாய் வருகின்றன ...
அம்மாவுக்கு இதற்கு பதில் தெரியவில்லை...
கார்களுக்கும் cemetary உண்டா?

குழந்தையின் அறிவாற்றலில் தன்னை மறந்து கொஞ்சம் நேரம் புன்னகையுடன் என்ன சொல்லலாம் என்று யோசித்ததில் அம்மாவுக்கு சமயோசிதமாய் வந்தது ஒரு பதில் :
''அப்பா மாதிரி மூளை இல்லாதவர்களுக்கு விற்று விடுவாங்க''
இந்த பதில் ஓரளவுக்கு உண்மை தான் என்று இந்தக் குழந்தைக்குப் புரிந்தது.
எனென்றால் அவள் அப்பா வாங்கின கார் பளபளவென்று கறுப்புக் கலரில் பெரியதாய் வீட்டு வாசலை அடைத்துக்கொண்டு நின்றிருந்தது.
வந்து நின்றதோடு சரி .... மூச்சை விட்டுவிட்டது ....ஓட்ட முயன்றதில் உபரி பாகங்கள் கிடைக்காமல் விண்டேஜ் கார்மதிப்புடன் அலங்காரமாய், தினமும் துடைத்து மெருகேற்றிய பொலிவுடன் மிளிர்ந்தது.
குழந்தையை இப்படிக் கேள்வி கேட்கத் தூண்டியது.
பதிலில் குழந்தை ஓரளவு சமாதானமாகி விட்டாலும் அப்பாவைப் பார்த்ததும் அடுத்த கட்டக் கேள்வி இயல்பாய் தொடர்ந்தது ….. ''அப்பா உங்களுக்கு மூளை இல்லைங்கறது நிஜமாப்பா?''….
(இப்போது முதலிலிருந்து படியுங்கள்)


No comments:

Post a Comment