Wednesday, October 21, 2009

தக்காளி சூப்

-->
 தக்காளி சூப்




''உங்களுக்கு ஒரு விஷயம் சொல்லணும்...
என் சொந்த அனுபவம்.

சில நாட்களுக்கு முன் ஒரு உணவகத்துக்குப் போயிருந்தேன்...
மெனு அட்டையே ஒரு புத்தகம் போல பளபளப்பாய் பிளாஸ்டிக் உறையுடன் ஜொலித்தது.
ஐட்டங்களை பார்த்துக்கொண்டே வரும்போது ''Tomato soup - Rs 30'' என்று போட்டிருந்தது.
சரி அதையே முதலில் ஆர்டர் பண்ணலாம் என்று நினைத்தேன்.
ஆனால் அதற்கு அடுத்ததாக மறுபடி ''Tomato soup (special) - Rs 60''  என்று போட்டிருந்தது.
 
இந்த இரண்டில் எதை ஆர்டர் பண்ணுவது?
waiter
யே  கேட்டேன்:
'' Tomato soup - Rs 30,  Tomato soup (special) - Rs 60'...
என்று அதையே
டபிள் விலையில் போட்டிருக்கீங்களே ...
இந்த அறுபது ரூபாய் தக்காளி சூப் என்ன வெளிநாட்டுத் தக்காளியில் செய்ததா?''
waiter
சொன்னார் :
''
ரெண்டும் ஒன்று தான் சார்.
கஸ்டமர்ஸ் தேவைக்கேற்றபடி கொடுப்பது எங்கள் பாலிசி'' என்று அங்கே மாட்டியிருந்த 'MISSION STATEMENT' பலகையை காட்டினார், கொஞ்சம் கூட சிரிக்காமல் சீரியசாக.
எனக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை...
''
அப்படின்னா எனக்கு புரியவில்லையே
கஸ்டமர்ஸ் தேவைக்கேற்றபடி என்றால்?
எல்லோரும் விலைமலிவாய் தரம் உயர்வாகத்தானே


எதிர்பார்ப்பார்கள் ?''
''
எல்லோரும் அப்படி இல்லை சார்.
சிலருக்கு விலை குறைவாய் இருந்தால் தரமும் குறைவாய் இருக்கும் என்று ஒரு நம்பிக்கை.
அறுபது ரூபாய் சூப் UMC கஸ்டமர்ஸ் கேட்பாங்க.
முப்பது ரூபாய் சூப்  LMC கஸ்டமர்ஸ் விரும்பி சாப்பிடுவாங்க.
இது நாங்க தினசரி பார்க்கிறதுதாங்க'' என்றார்.
''
அதென்ன UMC ... LMC...?
 
எனக்கு QMC தான் தெரியும்...QUEEN MARY'S COLLEGE ...
இதென்னப்பா புதுசா குழப்பறீங்களே...''
''
அதாங்க அப்பர் மிடில் கிளாஸ் (upper middle class)
அறுபது ரூபாய் சூப் கேட்டால் அவங்க UMC என்று புரிந்துகொள்வோம்.
முப்பது ரூபாய் சூப் ஆர்டர் பண்ணினால் அவங்க LMC  என்று தெரிந்துவிடும்''.
இது எனக்கு ரொம்ப அதிர்ச்சியான classification ஆக பட்டது.
மக்களை இப்படியெல்லாம் கொடுமையாக பிரிக்கிறாங்களே..
சாதிக்கொடுமைகள் போறாதா?
இது வேறே புதுப்பிரிவா?...
'indian made foreign liquor'
மாதிரி இருக்கே ...
நான் கேட்டேன் :
''
நான் UMC யும் இல்லை LMC யும் இல்லை ....
எப்படி ஆர்டர் பண்றது? '
''
அது ஒண்ணும் கஷ்டம் இல்லை சார்,
இரண்டையும் கலந்துட்டாப் போறது ...
அது 45 ரூபாய் தான்.''
அதிலிருந்து சூப் ஆர்டர் செய்வதையே விட்டு விட்டேன்.''


Sunday, October 18, 2009


விண்டேஜ் கார்

-->
விண்டேஜ் கார்


''அப்பா உங்களுக்கு மூளை இல்லைங்கறது நிஜமாப்பா?''
திடீர் என்று தன் செல்லக் குழந்தை இப்படிக் கேட்டதும் அப்பா கதி கலங்கிப்போனார்.
''என்ன கொழந்தே இப்படி கேட்கறே ...
அப்பாவை இப்படி மரியாதை இல்லாமல் ... யார் சொன்னது அப்படி?''
''அம்மா தான்''
'', அப்படியா ...எப்போ சொன்னா?''
''நீங்க பழைய காரை வாங்கினபோது சொன்னா''
''அது மெர்செடெஸ் பென்ஸ் காராக்கும் ... எல்லாருக்கும் கிடைக்காது''
''ஆனா ஓடாத கார்  ..... மெர்செடெஸ் ஆனாலும், மாருதி யானாலும் ஓடாத காரால் என்ன உபயோகம்?''
''நம்ம வீட்டில் மெர்செடெஸ் இருந்தால் பெருமை இல்லையா?''
''ஓடாத காருக்கு என்ன பெருமை?''
''உனக்கு அதெல்லாம் புரியாது ... நீ போய் உன் ஹோம் வொர்க் எல்லாம் முடிக்கிற வேலையைப் பார்''

குழந்தைகளுடன் எப்போது கேள்வி பதில் சங்கடமான கட்டத்துக்கு வந்தாலும் ஹோம் வொர்க் தான் கை கொடுக்கிறது.


இந்த உரையாடல் ஆரம்பிக்கும் முன் நடந்த இன்னொரு         முன்-உரையாடல் தான் இதற்கு அஸ்திவாரம்.
குழந்தைகள் எவ்வளவு சமர்த்தாய் விஷயங்களை கிரகித்துக் கொள்கிறார்கள் என்று கவனித்தால் வியப்பாய் இருக்கிறது ....          [ smart என்ற ஆங்கில வார்த்தை சமர்த்து என்னும் தமிழ் வார்த்தையிலிருந்து தான் வந்ததா?]
ஒவ்வொரு தலைமுறையும் முந்தைய தலைமுறையை விட smart தான் பல வகைகளில் ...

அந்த முன்-உரையாடலுக்கு வருவோம்.
அது இந்தக் குழந்தைக்கும் அதன் தாயாருக்கும் நடந்த கேள்வி பதில் ....
''அம்மா, ...தினம் தினம் புதுப் புது காரா வந்துகொண்டே இருக்கே .. எவ்வளோ கார் ....பெரிசு சின்னது .... எவ்வளோ கலர்லே ....''
''ஆமாம், ஆயிரக்கணக்கில் ... ஏன் ... லட்சக்கணக்கில் வந்து தெருவிலே ஒட்டவே இடமில்லாமல் திண்டாடறாங்க!  ... ஏன் கேட்கறே?''
'' இவ்வளோ வருஷமா கார் பண்ணறாங்களே ... பழசானா என்னவாகும்?''
''பழசானா ஓடாது .... மனுஷங்க மாதிரி தான் ... ஓடாமல் நின்னு மத்தவங்க உயிரை எடுக்கும்''
''மனுஷங்க ஓடாம நின்னுட்டா அவங்க செத்துப் போய்ட்டாங்கன்னு cemetary கொண்டுபோய் புதைச்சுடறாங்க,
கார் செத்துப் போனா என்ன பண்ணுவாங்க?''
இதுபோல் விசித்திரமான கேள்விகள் குழந்தைகளுக்கு எளிதாய் வருகின்றன ...
அம்மாவுக்கு இதற்கு பதில் தெரியவில்லை...
கார்களுக்கும் cemetary உண்டா?

குழந்தையின் அறிவாற்றலில் தன்னை மறந்து கொஞ்சம் நேரம் புன்னகையுடன் என்ன சொல்லலாம் என்று யோசித்ததில் அம்மாவுக்கு சமயோசிதமாய் வந்தது ஒரு பதில் :
''அப்பா மாதிரி மூளை இல்லாதவர்களுக்கு விற்று விடுவாங்க''
இந்த பதில் ஓரளவுக்கு உண்மை தான் என்று இந்தக் குழந்தைக்குப் புரிந்தது.
எனென்றால் அவள் அப்பா வாங்கின கார் பளபளவென்று கறுப்புக் கலரில் பெரியதாய் வீட்டு வாசலை அடைத்துக்கொண்டு நின்றிருந்தது.
வந்து நின்றதோடு சரி .... மூச்சை விட்டுவிட்டது ....ஓட்ட முயன்றதில் உபரி பாகங்கள் கிடைக்காமல் விண்டேஜ் கார்மதிப்புடன் அலங்காரமாய், தினமும் துடைத்து மெருகேற்றிய பொலிவுடன் மிளிர்ந்தது.
குழந்தையை இப்படிக் கேள்வி கேட்கத் தூண்டியது.
பதிலில் குழந்தை ஓரளவு சமாதானமாகி விட்டாலும் அப்பாவைப் பார்த்ததும் அடுத்த கட்டக் கேள்வி இயல்பாய் தொடர்ந்தது ….. ''அப்பா உங்களுக்கு மூளை இல்லைங்கறது நிஜமாப்பா?''….
(இப்போது முதலிலிருந்து படியுங்கள்)


மடமையிலே இனிமை காண முடியுமா
























’’நாம் எல்லோரும் தினசரி கொஞ்சம் நேரத்துக்காவது மூளையில்லாமல் செயல்படுகிறோம்’’ என்று ஒரு ஆராய்ச்சிக் கணிப்பு தெரிவிக்கிறது.

எதைத் தான் ஆராய்ச்சி செய்வது என்று ஒரு விவஸ்தையே இல்லாமல் போய்விட்டது ... நல்ல விஷயங்கள் பல இருக்கும்போது அதை எல்லாம் விட்டுவிட்டு .... மூளை இல்லாத ஆராய்ச்சி என்ன வேண்டிக் கிடைக்கிறது  என்று சிலர்கேட்கலாம்.

ஆனால் இந்த விவஸ்தை இல்லாத ஆராய்ச்சியிலும் ஓரளவு உண்மை இருப்பது மறுக்க முடியாதது.
நாம் உணராமலே நம் செயல்களில் இந்த மடத்தனம் அல்லது மூளை இல்லாத் தன்மைதானே வந்து நுழைவது காலம் காலமாய் புதுப் புது வழிகளில் சஞ்சரிக்கிறது.
இரவு படுக்குமுன் அன்றைய தினம் நடந்தவற்றை நினைவு கூர்ந்தோமானால் இது எவ்வளவு தூரம் நம்மை ஆக்ரமித்துள்ளது என்று தெரியவரும்
introspection என்ற சுயபரிசீலனை ரொம்ப உபயோகமான உத்தி.

இன்று காலை எனக்கு இதன் ஒரு பரிமாணம் தெரியவந்தது.
வாக்கிங் போகக் கிளம்பி கொஞ்சம் தூரம் நடந்த பின் நடை பாதை அடைத்திருந்ததால் தெருவில் இறங்கி நடக்க வேண்டி வந்தது .
இந்தத் தெருவில் வந்திருக்கக் கூடாது என்று நினைத்துக் கொண்டே நடக்கையில் என் பின்னே வந்த ஆட்டோ ஓட்டுனர் என்னைக் கூவி அழைத்து ‘’அறிவிருக்காய்யா .... வண்டி முன்னால் நடக்கறியே’’ என்று கூற நான் ‘’ஏம்பா நடக்கிற பிளாட்பாரம்  பூரா கையேந்திபவன் , மின்சார ஜங்க்ஷன் பெட்டி, பழக்கடை, அகில இந்திய  ஆட்டோ ஓட்டுனர் சங்கம் என்று  இப்படி மடக்கிப் போட்டால் நடுத்தெருவில் நடக்காமல் எங்கே நடக்கிறது? அதனால் அறிவில்லை என்று அர்த்தமா? ‘’
’’உன் பின்னாலேயே ஆட்டோ ஓட்டினா நான் எப்போ போய் சேர்றது?’’
அவர் கஷ்டம் எனக்குப் புரிந்தாலும் என்னை அறிவிருக்கா என்று கேட்டதில் ஒரு கொதிப்பு .

நம்மை நாமே முட்டாள் என்று சொல்லிக்கொள்வதில் நமக்கு ஓரளவு பழக்கம் வந்து விட்டது. ஆனால் வேறு யாராவது அப்படிச் சொன்னால் அது நம்மை பாதித்து சூடாக்கி விடுகிறதே ஏன்?
இருந்தும் ஓரளவு சுயக் கட்டுப்பாடுடன் மேலே பேசாமல் கொஞ்சம் ஒதுங்கி, சென்னை மாநகராட்சி தெருவோடு தோண்டிக் கொட்டியிருந்த மேட்டுக்கும், அங்கே  ‘தடங்கலுக்கு வருந்துகிறோம் என்று ஒருவருஷம் பத்து மாதமாய் வருந்திக்கொண்டிருந்த பலகைக்கும் நடுவில் நர்த்தன விநாயகர் கோலத்தில் நின்று வழிவிட்டேன்....
சென்னை தெருக்களில் நடக்கப் பழகிவிட்டால் நாட்டியப் பள்ளிகளுக்குப் போக வேண்டாம் .. தானே நாட்டியம் வந்துவிடும்.

அந்த ஆட்டோ  என்னைக் கடந்ததும் மறுபடி நடையைத் தொடர்ந்தேன்
கொஞ்சம் தூரம் நடந்தும் கட்டுக் கட்டாய் கீரை வந்து இறங்குவதைக் கண்டேன்.  இவ்வளவு freshஆய்  பார்த்ததும் அதை விட மனமில்லாமல் இரண்டு கட்டு வாங்கிக்கொண்டு கூடவே கொஞ்சம் மற்ற கறிகாய் களையும் சேர்த்ததில் இரண்டு கைகளிலும் பையோடு இனி வாக்கிங் தொடர முடியாத நிலையில் என் மடமையை உணர்ந்தேன் .... இதென்ன வாக்கிங் வந்து விட்டு இப்படி கீரையைப் பார்த்ததும் நடை தளர்ந்து விட்டேனே ....

இதாவது பரவாயில்லை ... நம் ஆரோக்யத்திற்காக கொஞ்சம் கீரை வாங்குவது தவறில்லை ... ஆனால் இரண்டு கைகளிலும் தூக்க முடியாமல் கறிகாய்களை சுமந்துகொண்டு வாக்கிங் எப்படி தொடர முடியும்?
வாக்கிங் வந்தால் வாக்கிங் மட்டும் தான் செய்ய வேண்டும் ... கறிகாய் வாங்க வேறு நேரம் ஒதுக்க வேண்டும் என்று என் மட மூளைக்கு அப்போது தான்உறைத்தது.

என்னை ஏசிய ஆட்டோவைத் தவிர வேறு ஏதாவது ஆட்டோ கிடைக்குமா என்று தேடலுடன் அங்கும் இங்கும் கண்ணோட்டம் விட்டதில் ஒரு மஞ்சள் தேவதை கறுப்புக் கிரீடத்துடன் வருவது தெரிந்தது.
என்னைப் பார்த்ததும் பக்கத்தில் வந்தது உரசி நின்றது.
’’என்னா சார்,   எங்கே போவணும்?’’
’’மயிலாப்பூர் போகணும் ‘’
’’சரி குந்து’’
’’எவ்வளவு’’
’’இன்னா சார், உனக்கு தெரியாததா ... பாத்துக் குடு ... ஏறு’’
’’மொதல்லே எவ்வளோன்னு சொல்லு’’
’’எண்பது ரூவா குடு ‘’
’’இது என்னப்பா அநியாயமா இருக்கே ... ஒண்ணரை கிலோ மீட்டருக்கு  எண்பது ரூபாயாமுப்பது ரூபா தான் தருவேன் ... மீட்டரில் இருபது ரூபா தான் வரும் ‘’
’’காலங்காத்தால போணி ...சரியான சாவு கிராக்கி ...
வேறே ஆளைப் பாரு ‘’
என்று எனக்குப் புகழாரம் சூட்டியபோது தான் தெரிந்தது அது மஞ்சள் தேவதை இல்லை கறுப்புப் பிசாசு என்று....
பத்மஸ்ரீ விருதுக்கு சமமான இந்த விருதினால் கொஞ்சம் பெருமிதத்துடன் கேட்டேன்
’’ஏம்பா சாவு கிராக்கின்னா என்ன ?’’
’’கிருஷ்ணாம் பேட்டை போக வேண்டிய கிராக்கிக்கு சாவு கிராக்கின்னு  சொல்வாங்க’’ 
ரொம்ப வினயத்துடன் எடுத்துரைத்தார் அந்த ஆட்டோ ஓட்டுனர்.
’’அது சரி கிருஷ்ணாம் பேட்டைக்குப்  போறவன் உனக்கு எப்படி துட்டு கொடுக்க முடியும்?’’
’’அதாங்க அதுக்கு  அர்த்தம் .... நீ குடுக்கற துட்டும் ஒண்ணுத்துக்கும் ஆவாது ... இன்னாத்துக்கு வீணா சௌண்டு வுடறே ... போய்க்கினே இரு’’ என்று கூறிச் சென்றார் அந்த நல்லிணக்க ஆட்டோ ஓட்டுனர்.

அவர் கொடுத்த பட்டத்துடன் என் கைப்பைகளின் துணையோடு  இன்னும் கொஞ்சம் தூரம் நடந்ததும் என் கலி தீர்க்க வந்தது பல்லவன் பேருந்து நிலையம்.
மூன்று பேருந்துகள் சேர்ந்து வந்ததில் மக்கள் அலைமோதியத் தள்ளலில் எந்த உந்தில் ஏறுவது என்று யோசிக்கக் கூட இடமில்லாமல் கூட்டத்தோடு  உந்தப்பட்டு ஏறி அமர்ந்தேன்.
நடத்துனர் வந்ததும் ‘’மைலாப்பூர்’’ என்று நூறு ரூபாய் நோட்டைக் கொடுத்தேன்.
பைகளை இறக்கி வைத்த சுகத்தை அனுபவிக்க விடாது கேட்டார் அந்த நடத்துனர் :
‘’என்னய்யா ... காலங்கார்த்தால நூறு ரூவா கொடுக்கறியே  அறிவு வேணாம்? ... சில்லறை குடு ‘’  என்றார்
அவர் தலைக்கு மேல் திருவள்ளுவர்
இனிய உளவாக இன்னாத கூறல்
கனி இருப்பக் காய் கவர்ந்தற்று
என்று கோணலாய் மாட்டி இருந்த பலகையில் ஆணித்தரமாய் சொன்னார் ...
நடத்துனருக்கு இல்லை .... எனக்குத்தான்.
’’ஐயா சில்லறை இல்லை எல்லாம் தீர்ந்துவிட்டது
கொஞ்சம் தயவு செய்து மன்னித்துக் கொள்ளுங்கள்’’
என்றதும் கொஞ்சம் தணிந்து விரலிடுக்கில் என் நூறு ரூபாய் நோட்டை நாலாய் மடித்துச் செருகிக்கொண்டு நகர்ந்தார்.

மயிலாப்பூர் வந்து இறங்கும் வரை நடத்துனர் கண்ணில் படவில்லை.
தேடிப்பிடித்து பாக்கி கேட்க பயமாய் இருந்தது.
பொறுமையும் இல்லை.
என் மூளையின்மையை மறுபடி நொந்து கொண்டே இறங்கி நடந்தேன் ..
ஆட்டோக்காரன் கேட்ட எண்பது ரூபாய் கொடுத்திருந்தால் இருபது ரூபாய் மிச்சமாகி இருக்குமே ...அதுவும் நேராய் வீட்டு வாசலில் வந்து இறங்கி இருக்கலாம் ...
இன்று நாள் சரியில்லை
வீட்டுக்குப் போய் தினக்காலண்டரில் பார்த்தேன்
சரியாய்ப் போட்டிருந்தது
கீழ்நோக்கு நாள் என்று
மேலும் என் ராசிக்கு பலன் ...ஏச்சு என்று போட்டிருந்தது!
ஒரே வார்த்தையில் தலையில் அடித்தாற்போல எவ்வளவு கச்சிதம்
ஜோசியர்களுக்கும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் ஏதாவது உள்வர்த்தகம் [ insider trading ] இருக்குமோ?


இனி எப்போது வாக்கிங்  போவதானாலும் அன்று நாள் எப்படி என்று பார்த்து அதன்படி நடக்க வேண்டும் என்று முடிவுசெய்தேன்.

ஜூஜூ உடன் ஒரு உரையாடல்

 

-->
ஜூஜூ  உடன் ஒரு உரையாடல்

''ஹலோ ...''
''ஹலோ அங்கிள் ''
''யார் பேசறது?''
''நான் தான் ஜூஜூ பேசறேன் அங்கிள்''
''ஜூஜூவா  ... வேடிக்கையான பேரா இருக்கே''
''என் முழு பேர், ஸ்கூல்லே ... ஜெக ஜனனி ....
ஆனா செல்லமா ஜூஜூ ன்னு தான் கூப்பிடுவா''
'', அப்படியா ... ஸோ ஸ்வீட்''
''தேங்க்ஸ் அங்கிள்''
''உங்கப்பா இல்லையா பாப்பா?''
''இல்லை அங்கிள் , அப்பா அம்மா ரெண்டுபேரும் வாக்கிங் போயிருக்காங்க''
'' நீ மட்டும் தான் இருக்கியா?''
''ஆமாம் அங்கிள் ''
''அப்பா எப்போ வருவார்?''
''தெரியாது அங்கிள்''
சரி ... நான் போன் பண்ணினேன்னு சொல்றயா பாப்பா?''
''சரி அங்கிள் .. சொல்றேன்''
''எப்படி சொல்வே?... என் பேர் தெரியுமா?''
''தெரியாதே அங்கிள், நீங்க சொல்லவே இல்லையே''
'' என் பேர் செல்வகணபதி சிற்சபேசன்''
''அங்கிள் அது அவ்வவும் உங்க பேரா?''
''ஆமாம் ஜூஜூ, திருப்பி சொல்லு பார்க்கலாம்''
''இவ்வளோ நீளம் பேர் இருந்தா எப்படி ஞாபகம் இருக்கும் ... கொஞ்சம் சின்னதா சொல்லுங்க அங்கிள்''
'' என் பேரை சின்னதாக்கினா  உங்கப்பாவுக்கு நான் யார்னு புரியாதே ...வேறே யாரோன்னு நினைச்சுக்க மாட்டாரா?''
''சரி திரும்ப சொல்லுங்க அங்கிள்''
''செல்வகணபதி சிற்சபேசன்''
'' செல் வ ....க ....ண .... ''
ஜூஜூ, நீ ஒரு பேப்பர்லே என் பேரை எழுதிக்கோ அப்போ ஞாபகம்  இருக்கும்''
''சரி அங்கிள் ... இருங்க பேப்பர் பென்சில் கொண்டுவரேன் ....
இப்போ சொல்லுங்க அங்கிள்''
''எழுதிக்கோ, செல்வ ....கணபதி.....சிற்சபேசன்''
''அங்கிள், செல்வ எப்படி எழுதணும்?''
''செ ...ல் ...வ ... ன்னு எழுதணும்''
''சரி அங்கிள், ஆனா செ எப்படி எழுதணும்?''
'' என்ன ஜூஜூ, உனக்கு வயசென்ன?''
'' எனக்கு அஞ்சு வயசு அங்கிள், ... நாளைக்கு தான் என் அஞ்சாவது பர்த்டே .... என் பர்த்டேக்கு வாங்க அங்கிள்''
'' அதை மொதல்லே சொல்லக்கூடாதா''
''மொதல்லே நீங்க கேக்கலையே அங்கிள்''
''சரி பாப்பாஇப்போ தான் எனக்கு புரியறது ... உனக்கு தமிழ் எழுத தெரியாது ன்னு .... இங்கிலீஷாவது எழுதுவாயா?''
''எனக்கு இங்க்லீஷ் நிறைய தெரியும் அங்கிள் ...
ரைம்ஸ் எல்லாம் சொல்லுவேன் ..... 
'ஏ பி சி டி .... ஈ எப் ஜி,  ....எச் ஐ ஜெ கே  ....எல் எம் என் ஓ பி .....
பாபா ப்ளாக்  ஷீப் ... ஹம்டி டம்டி ...
எல்லாம் தெரியும் ... சொல்லட்டுமா அங்கிள்''
'' அதில்லே ஜூஜூ, இங்க்லீஷ்லே எழுதத்தெரியுமா? ... ஏ பி சி டி எல்லாம்?''
'', தெரியும் அங்கிள், ஏ பி சி டி ஈ யெப் ஜி  வரையிலும் எழுதுவேன் .. மீதியெல்லாம் எங்க ஸ்கூல்லே இன்னும் சொல்லித்தரலை''

வெறும் ஏ பி சி டி   ஈ எப் ஜி யைக்  கொண்டு எப்படி செல்வகணபதி சிற்சபேசன் என்று எழுதுவது என்று குழம்பி நின்றார்  சிற்சபேசன்.
ஆனாலும் விடுவதாய் இல்லை.
'' சரி பாப்பா, உனக்கு ஒண்ணு, ரெண்டாவது எழுதத் தெரியுமா?''
''ஏன் அங்கிள்?''
''என் போன் நம்பரை எழுதிக்கத்தான்  ... உங்க போனிலே காலர் ஐடி இருக்கா ஜூஜூ?''
'' காலர் ஐடி ன்னா என்ன அங்கிள்?''
இப்போது இதை வேறு இழுத்து இன்னும் குழப்ப வேண்டாம் என்று சிற்சபேசன் வேறு மார்க்கம் யோசித்தார்.

''ஹலோ அங்கிள்''
குழந்தையும் விடாமல் கேட்டது.
யாருடனாவது பேச அவ்வளவு விருப்பம்.
அம்மா அப்பா இரண்டு பெரும் அவளுடன்  பேசக்கூட நேரமில்லாமல் வேலை, வாக்கிங் என்று பலவகைகளில் தாமே ஏற்படுத்திக்கொண்ட நிர்பந்தங்களில் மூழ்கித் தடுமாற, குழந்தை தன் சாமர்த்தியத்தில் வழி செய்துகொள்கிறது.
இது அவசர யுகக் குழந்தையானாலும்  இன்னும் இறுக்கங்களால் பாதிக்கப்படாதஎதற்கும் தயாராய் மிளிரும் நவீனப் பிறவி.

சிற்சபேசன் தொடர்ந்தார்:
''என்னோட நம்பர் சொல்றேன், எழுதிக்கிறயா? ''
''சொல்லுங்க அங்கிள்''
''ரெண்டு நாலு ஒண்ணு மூணு ....''
''அங்கிள், தப்பா சொல்றீங்க ....''
''என்ன தப்பு ஜூஜூ?''
''அங்கிள்ஒண்ணு ரண்டு மூணு நாலு தான் சரி ...நீங்க சொல்றது தப்பு''
''அதில்லை பாப்பா, அது ஒங்க ஸ்கூல்லே சொல்லிக்கொடுத்தது .....நான் சொல்றது என் போன் நம்பர்.
நான் சொல்றபடியே எழுதிக்கோ ....''
''சரி அங்கிள்''
''ரெண்டு நாலு ஒண்ணு மூணு''
''எழுதிட்டேன் அங்கிள்''
''திரும்ப சொல்லு பார்க்கலாம்''
''ரெண்டு நாலு ஒண்ணு மூணு''
''பரவாயில்லையே, ரொம்ப சமர்த்துப் பாப்பா ....
மீதியையும் சொல்றேன் எழுதிக்கறயா?''
''சொல்லுங்க அங்கிள்''
''ஒன்பது ஒன்பது ஆறு எட்டு''
''ஒன்பது எப்படி எழுதணும் அங்கிள்?''
''என்னம்மா, நம்பர் எல்லாம் தெரியும்னு சொன்னயே''
''ஆமா அங்கிள், ....
ஒன் டூ ....பக்கிள் மை ஷூ
த்ரீ போர் ....ஷட்  தி டோர்
பைவ் சிக்ஸ் .... பிக்கப்  தி ஸ்டிக்க்ஸ் 
செவென் எய்ட் ........''
''ஜூஜூ, என்ன சொல்றே நீ''
''எனக்கு ஒன், டூ …… எய்ட் வரை தெரியும்
ஒண்ணு, ரெண்டும் ….. எட்டு வரை தெரியும்
ஒன்பது எப்படி எழுதணும் அங்கிள்?''

சிற்சபேசன் இப்போது குழப்பத்தின் உச்சிக்குத் தள்ளப்பட்டார்.
அந்தக் குழந்தைக்கு அவரது நிலை புரிய வாய்ப்பில்லை.
''பரவாயில்லை ஜூ ஜூ, நானே அப்புறமா போன் பண்ணி அப்பா கிட்டே சொல்லி உனக்கு ஒன்பது எப்படி எழுதணும்னு கத்துத் தரச் சொல்றேன் ...சரியா? ... பை ''
''சரி  அங்கிள் ...நீங்க எங்கேருந்து  போன் பண்றீங்க  அங்கிள்?''
''நான் பேங்க் லேருந்து போன் பண்றேன்''
'', அம்மா கழுத்தறுக்கற கடன்காரன்னு சொல்வாங்களே அது நீங்கதானா''
ஐசிஐசிஐ பேங்க் கடன்காரன் போன் பண்ணி லோன் வேணுமான்னு கேட்டுக் கழுத்தறுக்கறான் என்று அம்மா சொன்னதை  குழந்தை எப்படிக் கிரகித்துக் கொண்டிருக்கிறது!
இப்போது சிற்சபேசனுக்கு  வியர்த்து விட்டது.
''ஜூ ஜூ அது நான் இல்லை ....
நான் வேறே கடன்காரன்''

தான் ஒரு கிரெடிட் கார்ட் தரகன்  இல்லை, வெறும் நண்பன் என்று அந்தக் குழந்தைக்கு எப்படிப்  புரிய வைப்பது
கிரெடிட் கார்ட்னா  என்ன அங்கிள் என்று கேட்கும் ....
 இதற்கு  மேல் ஏதும் சொல்லி ஜூஜூ வின் மதிப்பில் தன்னைத் தாழ்த்திக்கொள்ள சிற்சபேசனுக்கு மனமில்லை.
மறுபடி பை சொல்லி தன் உரையாடலை ஒருவழியாக முடித்துக் கொண்டார்