Monday, June 5, 2017

ஜூஜூ உடன் ஒரு உரையாடல்



''ஹலோ ...''
''ஹலோ அங்கிள்''
''யார் பேசறது?''
''நான் தான் ஜூஜூ பேசறேன் அங்கிள்''
''ஜூஜூவா  ... வேடிக்கையான பேரா இருக்கே''
''என் முழு பேர், ஸ்கூல்லே ... ஜெக ஜனனி ....
ஆனா செல்லமா ஜூஜூ ன்னு தான் கூப்பிடுவா''
'', அப்படியா ... ஸோ ஸ்வீட்''
''தேங்க்ஸ் அங்கிள்''
''உங்கப்பா இல்லையா பாப்பா?''
''இல்லை அங்கிள் , அப்பா அம்மா ரெண்டுபேரும் வாக்கிங் போயிருக்காங்க''
'' நீ மட்டும் தான் இருக்கியா?''
''ஆமாம் அங்கிள் ''
''அப்பா எப்போ வருவார்?''
''தெரியாது அங்கிள்''
சரி ... நான் போன் பண்ணினேன்னு சொல்றயா பாப்பா?''
''சரி அங்கிள் .. சொல்றேன்''
''எப்படி சொல்வே?... என் பேர் தெரியுமா?''
''தெரியாதே அங்கிள், நீங்க சொல்லவே இல்லையே''
'' என் பேர் செல்வகணபதி சிற்சபேசன்''
''அங்கிள் அது உங்க பேரா?''
''ஆமாம் ஜூஜூ, திருப்பி சொல்லு பார்க்கலாம்''
''இவ்வளோ நீளம் பேர் இருந்தா எப்படி ஞாபகம் இருக்கும் ... கொஞ்சம் சின்னதா சொல்லுங்க அங்கிள்''
'' என் பேரை சின்னதாக்கினா  உங்கப்பாவுக்கு நான் யார்னு புரியாதே ...வேறே யாரோன்னு நினைச்சுக்க மாட்டாரா?''
''சரி திரும்ப சொல்லுங்க அங்கிள்''
''செல்வகணபதி சிற்சபேசன்''
'' செல் வ ....க ....ண .... ''
ஜூஜூ, நீ ஒரு பேப்பர்லே என் பேரை எழுதிக்கோ அப்போ ஞாபகம்  இருக்கும்''
''சரி அங்கிள் ... இருங்க பேப்பர் பென்சில் கொண்டுவரேன் ....
இப்போ சொல்லுங்க அங்கிள்''
''எழுதிக்கோ, செல்வ ....கணபதி.....சிற்சபேசன்''
''அங்கிள், செல்வ எப்படி எழுதணும்?''
''செ ...ல் ...வ ... ன்னு எழுதணும்''
''சரி அங்கிள், ஆனா செ எப்படி எழுதணும்?''
'' என்ன ஜூஜூ, உனக்கு வயசென்ன?''
'' எனக்கு அஞ்சு வயசு அங்கிள், ... நாளைக்கு தான் என் அஞ்சாவது பர்த்டே .... என் பர்த்டேக்கு வாங்க அங்கிள்''
'' அதை மொதல்லே சொல்லக்கூடாதா''
''மொதல்லே நீங்க கேக்கலையே அங்கிள்''
''சரி பாப்பாஇப்போ தான் எனக்கு புரியறது ... உனக்கு தமிழ் எழுத தெரியாது ன்னு .... இங்கிலீஷாவது எழுதுவாயா?''
''எனக்கு இங்க்லீஷ் நிறைய தெரியும் அங்கிள் ...
ரைம்ஸ் எல்லாம் சொல்லுவேன் ..... 
'ஏ பி சி டி .... ஈ எப் ஜி,  ....எச் ஐ ஜெ கே  ....எல் எம் என் ஓ பி .....
பாபா ப்ளாக்  ஷீப் ... ஹம்டி டம்டி ...
எல்லாம் தெரியும் ... சொல்லட்டுமா அங்கிள்''
'' அதில்லே ஜூஜூ, இங்க்லீஷ்லே எழுதத்தெரியுமா? ... ஏ பி சி டி எல்லாம்?''
'', தெரியும் அங்கிள், ஏ பி சி டி ஈ யெப் ஜி  வரையிலும் எழுதுவேன் .. மீதியெல்லாம் எங்க ஸ்கூல்லே இன்னும் சொல்லித்தரலை''

வெறும் ஏ பி சி டி   ஈ எப் ஜி யைக்  கொண்டு எப்படி செல்வகணபதி சிற்சபேசன் என்று எழுதுவது என்று குழம்பி நின்றார்  சிற்சபேசன்.
ஆனாலும் விடுவதாய் இல்லை.
'' சரி பாப்பா, உனக்கு ஒண்ணு, ரெண்டாவது எழுதத் தெரியுமா?''
''ஏன் அங்கிள்?''
''என் போன் நம்பரை எழுதிக்கத்தான்  ... உங்க போனிலே காலர் ஐடி இருக்கா ஜூஜூ?''
'' காலர் ஐடி ன்னா என்ன அங்கிள்?''
இப்போது இதை வேறு இழுத்து இன்னும் குழப்ப வேண்டாம் என்று சிற்சபேசன் வேறு மார்க்கம் யோசித்தார்.

''ஹலோ அங்கிள்''
குழந்தையும் விடாமல் கேட்டது.
யாருடனாவது பேச அவ்வளவு விருப்பம்.
அம்மா அப்பா இரண்டு பெரும் அவளுடன்  பேசக்கூட நேரமில்லாமல் வேலை, வாக்கிங் என்று பலவகைகளில் தாமே ஏற்படுத்திக்கொண்ட நிர்பந்தங்களில் மூழ்கித் தடுமாற, குழந்தை தன் சாமர்த்தியத்தில் வழி செய்துகொள்கிறது.
இது அவசர யுகக் குழந்தையானாலும்  இன்னும் இறுக்கங்களால் பாதிக்கப்படாதஎதற்கும் தயாராய் மிளிரும் நவீனப் பிறவி.

சிற்சபேசன் தொடர்ந்தார்:
''என்னோட நம்பர் சொல்றேன், எழுதிக்கிறயா? ''
''சொல்லுங்க அங்கிள்''
''ரெண்டு நாலு ஒண்ணு மூணு ....''
''அங்கிள், தப்பா சொல்றீங்க ....''
''என்ன தப்பு ஜூஜூ?''
''அங்கிள்ஒண்ணு ரண்டு மூணு நாலு தான் சரி ...நீங்க சொல்றது தப்பு''
''அதில்லை பாப்பா, அது ஒங்க ஸ்கூல்லே சொல்லிக்கொடுத்தது .....நான் சொல்றது என் போன் நம்பர்.
நான் சொல்றபடியே எழுதிக்கோ ....''
''சரி அங்கிள்''
''ரெண்டு நாலு ஒண்ணு மூணு''
''எழுதிட்டேன் அங்கிள்''
''திரும்ப சொல்லு பார்க்கலாம்''
''ரெண்டு நாலு ஒண்ணு மூணு''
''பரவாயில்லையே, ரொம்ப சமர்த்துப் பாப்பா ....
மீதியையும் சொல்றேன் எழுதிக்கறயா?''
''சொல்லுங்க அங்கிள்''
''ஒன்பது ஒன்பது ஆறு எட்டு''
''ஒன்பது எப்படி எழுதணும் அங்கிள்?''
''என்னம்மா, நம்பர் எல்லாம் தெரியும்னு சொன்னயே''
''ஆமா அங்கிள், ....
ஒன் டூ ....பக்கிள் மை ஷூ
த்ரீ போர் ....ஷட்  தி டோர்
பைவ் சிக்ஸ் .... பிக்கப்  தி ஸ்டிக்க்ஸ் 
செவென் எய்ட் ........''
''ஜூஜூ, என்ன சொல்றே நீ''
''எனக்கு ஒன், டூ …… எய்ட் வரை தெரியும்
ஒண்ணு, ரெண்டும் ….. எட்டு வரை தெரியும்
ஒன்பது எப்படி எழுதணும் அங்கிள்?''

சிற்சபேசன் இப்போது குழப்பத்தின் உச்சிக்குத் தள்ளப்பட்டார்.
அந்தக் குழந்தைக்கு அவரது நிலை புரிய வாய்ப்பில்லை.
''பரவாயில்லை ஜூ ஜூ, நானே அப்புறமா போன் பண்ணி அப்பா கிட்டே சொல்லி உனக்கு ஒன்பது எப்படி எழுதணும்னு கத்துத் தரச் சொல்றேன் ...சரியா? ... பை ''
''சரி  அங்கிள் ...நீங்க எங்கேருந்து  போன் பண்றீங்க  அங்கிள்?''
''நான் பேங்க் லேருந்து போன் பண்றேன்''
'', அம்மா கழுத்தறுக்கற கடன்காரன்னு சொல்வாங்களே அது நீங்கதானா ''
ஐசிஐசிஐ பேங்க் கடன்காரன் போன் பண்ணி லோன் வேணுமான்னு கேட்டுக் கழுத்தறுக்கறான் என்று அம்மா சொன்னதை  குழந்தை எப்படிக் கிரகித்துக் கொண்டிருக்கிறது!
இப்போது சிற்சபேசனுக்கு  வியர்த்து விட்டது.
''ஜூ ஜூ அது நான் இல்லை ....
நான் வேறே கடன்காரன்''

தான் ஒரு கிரெடிட் கார்ட் தரகன்  இல்லை, வெறும் நண்பன் என்று அந்தக் குழந்தைக்கு எப்படிப்  புரிய வைப்பது
கிரெடிட் கார்ட்னா  என்ன அங்கிள் என்று கேட்கும் ....

 இதற்கு  மேல் ஏதும் சொல்லி ஜூஜூ வின் மதிப்பில் தன்னைத் தாழ்த்திக்கொள்ள சிற்சபேசனுக்கு மனமில்லை.
மறுபடி பை சொல்லி தன் உரையாடலை ஒருவழியாக முடித்துக் கொண்டார்

Thursday, September 1, 2011

லிப்டில் ஒரு அதிர்ச்சி


லிப்டில் ஒரு அதிர்ச்சி

சில  நேரங்களில் அவசிய மற்ற வார்த்தைகளை அள்ளி வழங்குகிறார்கள்  சிலபேர்மற்றவர்களை அது எப்படி பாதிக்கும் என்று சிறிதும் சிந்திக்காமல்.
ஒருமுறை எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பில் லிப்ட்க்காக  காத்திருக்கும்போது ஒருவர் வந்தார்.
அவர்: '' ஹலோ, நீங்கள் புதியதாய் இங்கே வந்திருக்கிறீர்கள் இல்லையா?''
நான்: ''ஆமாம்''
அவர் : ''நீங்கள் ஜாம்பியாவில் வேலை செய்துவிட்டு இப்போது இங்கே வந்து செட்டில் ஆகி இருக்கிறீர்கள் என்பது உண்மையா?''
நான் : '' ஆமாம்''
என்னைப்பற்றி இவ்வளவு விரைவில் இவ்வளவு தெரிந்து கொண்டிருக்கிறார் …. இவர் யாராக இருக்கும்?
அதற்குள் லிப்ட் வர இருவரும் ஏறிக் கொண்டோம்.
அவர் கேள்விக் கணைகளைத் தொடர்ந்தார்.
''
எவ்வளவு வருடம் ஜாம்பியாவில் இருந்தீர்கள்?''
நான்: ''ஐந்து வருடம்''
அவர் : ''ஓஹோ, பரவாயில்லை.
எனக்குத் தெரிந்த  நண்பர் ஒருவர் ஜாம்பியாவில் டாக்டராக இருந்தார்.
நான்: ''அப்படியா?''
அவர் : '' ஆமாம். ஆனால் ஒரு வருஷத்தில் அங்கேயே காலமாகி விட்டார்.''
நான்: '' அடப்பாவமே''
இதற்குமேல் இந்த அதிர்ச்சிகரமான தாக்குதலை எப்படி சமாளிப்பது என்று எனக்குத் தெரியவில்லை.... எனினும் சொன்னேன்ன் :
''
சில நேரங்களில் டாக்டர்களும் இறந்துபோக நேரிடுகிறது...
இதுபோல் நடப்பது நமக்கு அப்பாற்பட்டது, என்ன செய்வது'' என்றேன்
அதற்குள் லிப்ட் இறங்கிவிட எங்கள் இனிய உரையாடல் முடிவடைந்தது.
நான் ஏதோ ஞானி என்பது போல என்னைப் பார்த்துவிட்டு மறைந்தார் அந்த நண்பர்.
இன்னும் கதை முடியவில்லை .....

இந்த மறக்கமுடியாத உரையாடலைப் பற்றி எங்கள் அடுக்குமாடிக் குடியிருப்பில் சகவாசியாய் இருக்கும் இன்னொரு நண்பரிடம் கூறியபோது அவர் சொன்னது எனக்குவியப்பளித்தது.
''
, அவர் ஒல்லியா, உயரமா, வழுக்கையா, சார்லி சாப்ளின் மாதிரி ஒட்டு மீசையுடன் இருந்தாரா?''
நான்: '' ஆமாம், எப்படி இவ்வளவு சரியாகக் கண்டுபிடித்தீர்கள்?''
அவர்: '' அவர்  ஒரு லாயர், ...வழக்கறிஞர்.... இப்போதெல்லாம் வழக்குரைஞர் என்று சொல்லவேண்டும். அவர் எப்பவும் இப்படித்தான்.''
எனக்கு ஆச்சரியம்.
நான்: '' எப்பவும் என்றால்?''
அவர்: ''அதாவது ... யாரைப்  பார்த்தாலும் ஏதாவது பேச ஆரம்பிப்பார் .
எனக்கும் ஒருமுறை இதுபோல் நடந்தது.
சமீபத்தில் ஒரு நாள் என்னைப் பார்த்தபோது அவர் 'ஹலோ' சொல்லிவிட்டுக் கேட்டார்:'நீங்கள் என்ன செய்கிறீர்கள்?'
நான் சொன்னேன்: 'நான் மரின் என்ஜினீயர், கப்பல் பராமரிக்கும் வேலை''
அவர் பதிலளித்தார்:' , பரவாயில்லையே,
எனக்கு ஒரு மரின் என்ஜினீயரைத்  தெரியும்
அவர் மெக்சிகோ கப்பலில் வேலை செய்தார்'
நான்: 'அப்படியா?'
அவர்:'ஆமாம் ... ஆனால் அந்தக் கப்பலிலேயே இறந்து விட்டார், போன வருஷம்'
எனக்கு வியப்பாகிவிட்டது.
என்னடா, இந்த மனுஷன் இப்படி இங்கிதம் இல்லாமல் பேசுகிறாரே என்று. இந்த வருஷம் தான் நான் படிப்பு முடிந்து கப்பலில் பணிபுரியச் செல்கிறேன். இது என்ன அபசகுனம் மாதிரி.''
என்று சொல்லி முடித்தார் அந்த சகவாசி.
இப்போது எனக்கு அந்த வழக்குரைஞர் நண்பரைப் பற்றி கொஞ்சம் புரிய ஆரம்பித்தது.
எங்கள் அபார்ட்மென்டில் உயரமாக, ஒல்லியாக, வழுக்கையாக, ஒட்டு மீசையுடன் ஒருவரை நீங்கள் சந்திக்க நேர்ந்தால் அதிர்ந்துவிடாதீர்கள். அவர் இறந்தவர்களைப்பற்றிய ஸ்பெஷலிஸ்ட்.
ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான சுவாரசியங்கள்.
கடவுள் அவருக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கட்டும்!


தாடி


தாடி

சில பேர் தியானம் (meditation) கத்துக்கணும்னு யாராவது தாடியோட இருக்கறவங்க பின்னாலேயே போவாங்க.
நமக்கெல்லாம் தாடி மேலே ஒரு மரியாதை.
தாடி வெச்சவர்கள் எல்லாம் சாமியார்கள் என்று நம்புகிற வெகுளித்தனம்.
அரபு நாடுகளில் தாடி வெச்சவங்களை கொஞ்சம் உஷாராக கவனிக்கறாங்க.
எந்த தாடியில் எந்த பாம்பு (bomb)  இருக்குமோ என்ற நிலை....
ஒருவர் அப்படித்தான் ஒரு போலிச் சாமியாரிடம் ஏமாந்ததில் தாடியைக் கண்டாலே பிடிக்காது. ஆனால் தமிழ் சினிமா மோகம்.
''
நான் கடவுள்'' திரைப்படம் பார்த்தே ஆக வேண்டும் .... தாடியோடு நாயகன் இருந்தாலும் பரவாயில்லை என்று படம் பார்க்கப் போனார்.
அவருக்குக் கூட்டத்தில் படம் பார்க்கப் பிடிக்காது.
கடைசி வாரம் படம் திரையிலிருந்து விலகுமுன் பார்ப்பது அவர் வழக்கம்.
காலி இடங்களுக்கு நடுவே காலைத்தூக்கிப் போட்டுக்கொண்டு நிம்மதியாய்ப் பார்ப்பார்.
அதில் ஒரு சந்தோஷம்.
’’
நான் கடவுள்’’ திரைப்படம் பார்க்கப்போனபோது அப்படித்தான் காலி வரிசையில் கடைசியில் அமர்ந்தார்....
ஆனால் அவர் மகிழ்ச்சி சில நிமிஷங்களில் மறைந்தது.
ஒரு தாடிக்காரர் அவர் பக்கத்தில் வந்து அமர்ந்தார்.
''
இவ்வளோ இடம் காலி ....என் பக்கத்தில் இடித்துக்கொண்டு ஏன் இப்படி உட்காரணும்?''
இந்த தாடிக்காரனை எப்படியாவது நகர்த்தணும் என்று நினைத்தார்.
தான் வேறு இடத்துக்கு போகலாமே என்று தோன்ற வில்லை.
முதலில் வந்தவனுக்கு உரிமை?
அவர் சொன்னார், பக்கத்தில் இருந்த தாடிக்காரரிடம் :
''
நானும் உங்களை மாதிரி அசிங்கமா தாடி வெச்சிருந்தேங்க.....
ஒரு நாள் கண்ணாடியில் பார்த்ததும் இவ்வளவு அசிங்கமாய் இருக்கே இந்த தாடி ....
அதனால்தான் நம்மளை யாரும் கல்யாணம் செய்துக்க மாட்டேங்கறாங்க என்று புரிந்தது.
உடனே சலூனுக்குப் போய் தாடியை அடியோடு எடுத்து விட்டேன்.''
அதற்கு பக்கத்தில் இருந்த தாடிக்காரர்:
''
அய்யா, நானும் ஒரு நாள் கண்ணாடியில் என் முகத்தை பார்த்தபோது
திடுக்கிட்டேன்,....
உங்களை மாதிரியே அசிங்கமாய் இருந்தது என் முகம்.
அதை மறைக்கத்தான் தாடி வளர்க்க ஆரம்பித்தேன்.'' என்றார்.
''
அப்படியா, அப்போ உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா?''
''
இல்லீங்க...... உங்களுக்கு?''
''
எனக்கும் இன்னும் ஆகலீங்க.''
இந்த common ground  அவர்களுக்குள் ஒரு நட்பை ஏற்படுத்தி விட்டது.
இப்போதெல்லாம் பல படங்களை அவர்கள் சேர்ந்தே பார்கிறார்கள்.
தாடியால் இப்படி ஒரு நட்பு.

Monday, January 31, 2011

டி -ஷர்ட்


டி -ஷர்ட்
[ T SHIRT ]
நகர்புற வாழ்க்கையில் சில ரசிக்கத்தக்க சம்பவங்கள் ……
எங்கள் பக்கத்து வீட்டுப் பையன் ஒரு நாள் '' ஹலோ, அங்கிள் '' என்றான் .... நாங்கள் வீட்டை விட்டு வெளியே போகும்போது ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்வதும், சில வார்த்தைகள் பகிர்ந்துகொள்வதும்  இந்த அடுக்கு மாடி வாழ்க்கையில் அன்றாடம் நடக்கும் சில பரிமாற்றங்கள்.
பிளஸ்-டூ  துருதுருப்பு.
நல்ல சூட்டிகையான பையன்.
நானும் '' ஹலோ friend,  how are you ''  என்றேன் பதிலுக்கு.
கூடவே  '' உன் டி -ஷர்ட் பிரமாதம்'' என்றேன்.
அதில் இருந்த வாசகம் என்னை ஈர்த்தது:
'' I AM THE PROUD PRODUCT OF 
   MY DEAR FATHER'S BRAIN AND
   MY  LOVING MOTHER'S  BANK BALANCE!''
என்பதுதான் அதன் வாசகம்!
தமிழாக்கம்:
''என்னை உருவாக்கியது
 
என் அருமை அப்பாவின் மூளையும்
 
என் அன்பான அம்மாவின் பண பலமும்.''
நான் சிரித்தேன், கூடவே வியந்தேன். எவ்வளவு நல்ல அஸ்திவாரம்
பரவாயில்லை பையனுக்கு நிச்சயம் நல்ல எதிர்காலம் .அப்போது அவன் சொன்னான்,
''அங்கிள், இந்த டி -ஷர்ட் என்னை ஒரு இக்கட்டான நிலைமையில் இருந்து காப்பாற்றியது போன வாரம்.''
''
அப்படி என்னப்பா இக்கட்டு  உனக்கு, இந்த இளம் வயதில்... அதுவும் உன் அருமை அப்பாவும், அன்பான அம்மாவும் உனக்கு துணை இருக்கும் போது என்ன இக்கட்டு வந்தாலும் பறந்து போகாதோ?''
''
போன வாரம் கணக்குப் பரிட்சையில் எனக்கு ஜீரோ மார்க்.
அன்னிக்கு என் டீச்சர் என்னை கூப்பிட்ட போது பயந்துகொண்டே போனேன், என்ன சொல்லி தப்பிக்கலாம் என்ற எண்ணத்தில்.... ' உடம்பு சரியில்லை, அதனால் பரீட்சைக்குச் சரியாகப் படிக்க முடியவில்லை' என்று முதலிலேயே பலதடவை சொல்லியாச்சு.
எடுபடாது.
திடீர் என்று ஒரு மின்னல் மூளையில் ....
'
மிஸ், இதுக்கு நான் காரணமில்லை ... இது தான் காரணம் 'என்று இந்த டி -ஷர்ட் வாசகத்தை காட்டினேன்அன்றைக்கு அதிர்ஷ்ட வசமாக இந்த டி -ஷர்ட் அணிந்திருந்ததால்.
' I AM THE PROUD PRODUCT OF
MY DEAR FATHER'S BRAIN
AND MY LOVING MOTHER'S BANK BALANCE'
என்று கூடவே படித்தேன், சிரிப்பை அடக்கிக்கொண்டு.
அவர் கேட்டார்,'' என்ன சம்பந்தம் இல்லாமல் ஜோக் அடிக்கிறாய்,டி -ஷர்ட் க்கும் கணக்கில் மார்க் வாங்குவதற்கும் என்ன சம்பந்தம்?' என்று.
நான் சொன்னேன்:
' எங்கப்பா எப்பவும் சொல்வார் ... எங்கம்மாவுடைய பேங்க் பாலன்ஸ், எங்கப்பாவுடைய மூளை  இரண்டும் ஜீரோ ' என்று.
டீச்சர் சிரித்து விட்டார், என்னை கோபிக்க வேண்டும் என்று தோன்றாமல்....
எப்படியோ தப்பித்தேன் அன்றைக்கு.''அவன் சொன்னதைக் கேட்டு எனக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை.
நானும் பலமாகச் சிரித்தேன். எவ்வளவு நகைச்சுவை உணர்வு உள்ள குடும்பம்!
''
இல்லாவிட்டால் என்ன பண்ணியிருப்பார்உங்கள் டீச்சர் ?''
''
ரொம்ப ஹோம் வொர்க்  கொடுத்திருப்பார் ''
''
அதனால் என்ன, செய்ய வேண்டியது தானே?''
''
மறுபடி ஜீரோ வாங்கினால், மறுபடி இதே T-SHIRT உதவாது வேறே ஏதாவது வழி பார்க்கணும்'' என்றான் என் பக்கத்து வீட்டு ஜீனியஸ்.
உண்மையாகவே ஜீனியஸ் தான் .... இது போல் தப்பிக்க ரொம்ப மூளை வேண்டும்.

ஒரு கழுதை கொடுத்த உதை


ஒரு கழுதை கொடுத்த உதை
லிபியா
1995
எண்ணை சுத்தீகரிப்பு  ஆலை
எனக்கு பொறியியல் வேலை
எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு பண்ணை (farm).வாரம் ஒருமுறை அங்கே போய் பால் வாங்கி வருவது என் வாடிக்கை.
அந்தப் பண்ணையின் உரிமையாளர் இப்ரஹீம்.
நல்ல தடிமனான வஞ்சனை இல்லாத உடல்.
சிரித்தால் வாய் முழுவதும் தங்கம் ஜொலிக்கும் பல் வரிசை.
உள்ளே நுழைந்ததும் ஓடிவந்து வரவேற்கும் கடைக்குட்டிப் பெண்.
புஸு புஸு என்று கிள்ளத் தோன்றும் கன்னங்கள்.
ஐந்து அல்லது ஆறு வயதுதான்.
ஓடி வந்து என்னிடமிருந்து பால் நிரப்பும் ஐந்து லிட்டர் பிளாஸ்டிக் கேனை பிடுங்கிக்கொண்டு என் கையிலிருந்து ஒரு சாக்லேட் துண்டையும் ஆவலுடன் பறித்துக்கொண்டு துள்ளி ஓடும் ஒய்யாரம் அந்த குழந்தைக்கே உரிய, என்னைக் கவர்ந்த வரப்ரசாதம்.
நான் காரைத் திருப்பிப் பார்க் செய்து விட்டு இறங்கிப் போவதற்குள் இப்ரஹீமின்  மற்றக் குழந்தைகள் என்னை மொய்த்துக்கொள்ளும்.
வரிசையாக ஒண்ணரை ஒண்ணரை வயது வித்தியாசத்தில் ஒரே அச்சில் வார்த்துச் சிரிக்கும் பொம்மைகள்.
ஒரு சாக்லேட்  போதும் அவை மலர.
இப்ரஹீம் பண்ணை நடுவிலிருந்து குரல் கொடுக்க நான் அவரை நோக்கி  நடக்க ஆரம்பித்தேன்.
அவரிடம் போய் கை குலுக்கி சம்பிரதாய வினவல்களை அராபிய மொழியில் எனக்குத் தெரிந்த அளவில் பரிமாறிக்கொண்டபின் அங்கே கட்டி இருந்த அவருடைய கழுதை என்னைப் பார்த்து அன்புடன் கனைத்ததில் ஒரு சந்தோஷம் ஏற்பட்டது....ஏதோ அருமை நண்பனை பார்த்த மாதிரி.
இப்ரஹீம் சொன்னார்:
''
இந்தக் கழுதை என் பிரியமான பிராணி.
என் மனைவியை விட என் கழுதை சில விஷயங்களில் மேன்மையானது''எனக்கு ரொம்ப வியப்பாகி விட்டது. இப்படியும் ஒரு மனிதனா?அதுவும் வீட்டில் மனைவி இருக்கும்போதே இப்படி உரத்தகுரலில் சொல்ல என்ன தைரியம்?
''
என்ன இப்ரஹீம் ... ஏன் இப்படி சொல்கிறாய்... உன் மனைவி ரொம்ப நல்ல மாதிரியாச்சே.''
''
அப்படித்தான் எல்லோரும் நினைக்கிறார்கள்.
ஆனால் நடப்பது வேறு.
நான் காலை ஐந்து மணியிலிருந்து பண்ணை வேலைகளை செய்துகொண்டிருக்கிறேன்....
பாருங்கள், நான் ஒரு நிமிடம் ஓய்வாக நின்றால் உடனே குரல் கொடுப்பாள் அடுத்த வேலை தர.
என் கழுதை அப்படி இல்லை.
நான் கட்டிய இடத்தில் அமைதியாக மேய்ந்து கொண்டு இருக்கும். நான் முதுகில் ஏற்றும் சுமையை சலிக்காது என்னுடன்  எடுத்து வரும்.
எனக்கு என் கழுதை தொந்திரவே தந்ததில்லை.
எவ்வளவு நல்ல பிராணி இது.
கடவுள் இந்தக் கழுதையை ரட்சிக்கட்டும்.''என்று கூற , நான் அந்த அதிசயக் கழுதையை நெருங்கிப் பார்க்க அடி எடுத்து வைத்தேன்.
உடனே அந்தக் கழுதை தன் உடலைத் திருப்பி அதன் பின்னங்கால்கள் என் பக்கம் வரும்படி நின்றது.
சரி நாம் வேறு பக்கம் பார்க்கலாம் என்று நான் அடியெடுத்து வைக்க அந்தக் கழுதையும் மறுபடி அதன் பின்கால்கள் என்னை வரவேற்கும் நிலையில் திரும்பி நின்றது.
நான் புரிந்து கொண்டேன்.
கழுதைகள் கூட புத்திசாலிகள் தான்.
மனிதனை நெருங்க விடாமல் உதைக்க அவற்றுக்கு இயற்கை கற்றுக்கொடுத்திருக்கிறது.
ரொம்பவும் நெருங்க முற்பட்டால் நம் முன்பற்களை இழக்க நேரிடும்.
இந்த defence mechanism ( தற்காப்புத் திறன் ) எல்லாக் கழுதைகளுக்கும் உண்டு.
அவைகளுக்கு தெரியும்....இந்த மனிதப் பிராணிகளை மதித்துப் பக்கத்தில் வர விட்டால் நம் மேல் ஏறி உட்கார்ந்து நம்மையே அதிகாரம் செய்வார்கள் என்று.
அந்தக் கழுதையின் உரிமையை மதித்து நான் சிறிது நகர்ந்தேன்.
கொஞ்சம் தள்ளி நின்று பார்த்தபோது ஒரு வேடிக்கையான விஷயம் தென்பட்டது . அந்தக் கழுதை கட்டியிருந்த கயிறு சுமார் இருபது  அல்லது  இருபத்து ஐந்து அடி நீளம் இருக்கும்.பக்கத்துப் பண்ணைக்குப் பரவாமல் மேயும் அளவுக்குக் கொடுக்கப் பட்ட நீளம்.
நாள் பூரா மேய்ந்தாலும் போதுமான புல்லும் செடிகளும் வளர்ந்திருந்த செழிப்பான பூமி .
அந்தக் கழுதைக்கு குறைபட ஏதுமில்லை.
ஆனால் நான் பார்த்த ஒரு விஷயம் என் மனதில் கேள்விக்குறியாய் தொடர்ந்தது.
அந்தக் கழுதை, கட்டியிருந்த கம்பத்தின் அருகாமையிலேயே மேய்ந்து கொண்டிருந்தது.
கொஞ்சம் பெரிய வட்டத்தில் நிறைய பசுமை  இருந்தும் சிறிய வட்டத்திலேயே அடங்கி இருந்தது....
ஏன் என்று பார்த்தால் அது கயிற்றை ஒரே முகமாகச் சுற்றிச்  சுற்றி அந்தக் கயிற்றின் நீளம் முழுவதும் அந்தக் கம்பத்தில் ஏறி, மிகக் குறுகிய அளவே எஞ்சி இருந்தது.
அந்தக் கழுதை கொஞ்சம் நிதானித்துப் பார்த்திருந்தால் அந்தக் குறுகிய வட்டத்திலிருந்து விடுபட்டு நல்ல பசுமையான புல்லை மேய வாய்ப்புக்  கிடைத்திருக்கும்.
ஆனால் குறுகிய வட்டத்திலேயே ஒரே பக்கமாக சுற்றி வந்து தன்னை வளைத்துப் போட்டுக்கொண்ட அறியாமையை உணரவில்லை.
உணர்ந்தால் அது மிக எளிதாய் மற்ற பக்கத்துக்கு திரும்பிச் சுற்றி வந்து தன்னை இந்தக் குறுகிய வட்டத்திலிருந்து விடுவித்துக் கொள்ளலாம்.
இதெல்லாம் அந்தக் கழுதைக்குத் தெரிய வேண்டும் என்று நான் நினைப்பதே ஒரு மடமை தான்.
அதற்கு அதுபோன்ற நிர்பந்தங்கள் இல்லை.
மனிதனைப் போல நினைக்க வேண்டிய மன உளைச்சலும் அதற்கில்லை.
திடீர் என்று எனக்கு ஒரு உதை!
உடலில் இல்லை
மனதில்.
'
நானும் அந்தக் கழுதை போல்தானே?' என்ற நினைப்புத்தான் அந்த உதை.
கடந்த கால அனுபவங்களினால் ஏற்படுத்திக்கொண்ட  மனத்தடைகள், என் சுற்றம், என் குடும்பம், என் கலாச்சாரம், என் தொழில் என்று என்னைச் சுற்றி வட்டங்களை நிறுவிக்கொண்டு அந்தக் குறுகிய இடத்தில் மேய்ந்துகொண்டிருக்கும் நான் இந்தக் கழுதையை விட என்ன உயர்த்தி?அந்தக் கழுதை அந்தக் கணத்தில் ஒரு நல்ல பாடம் கற்பித்தது.
இதுவரை அதை என்னால் மறக்க முடியவில்லை.
அந்தப் பரிமாணத்திலிருந்து என்னை மீட்க வந்ததுபோல் இப்ரஹீமின்  மனைவி பால் நிரப்பிய குடுவையுடன் வந்தாள்.
நாங்கள் கழுதையுடன் உரையாடிக்கொண்டிருந்த காட்சியைக் கண்டு சிரித்துக் கொண்டே சொன்னாள்:
''
இந்த மனிதனின் மடமையைப் பாருங்கள் ...
இந்தக் கழுதை இவருக்கு சோறு போடுமா?என்னை விட இந்தக் கழுதை எப்படி மேலாகும்?நான் தினமும் படைத்த உணவு எவ்வளவு சுவையானது என்று இப்ரஹீமின் உடலே சொல்லும்.''என்று கூறியபடி அவரது தொப்பையைத் தொட்டுக்காட்டி கேலி செய்தாள்.
இதற்கு ஒன்றும் சளைக்கவில்லை இப்ரஹீம்.
''
நீயும் எனக்கு நிகர் தான்'' என்று சிரித்தான்.
அவளுடைய சுற்றளவை இப்ரஹீம் எட்ட பல நாட்கள் ஆகும் என்பது நிதர்சமான உண்மை.
நான் சிரித்துக்கொண்டே பாலுக்குப் பணத்தைக் கொடுத்துவிட்டு காரில் ஏறினேன்.
அந்தக் கழுதை எனக்கு கற்றுக் கொடுத்த பாடம் என்னுடன் ஐக்கியமாகி விட்டது.