''ஹலோ ...''
''ஹலோ அங்கிள்''
''யார் பேசறது?''
''நான் தான் ஜூஜூ பேசறேன் அங்கிள்''
''ஜூஜூவா ... வேடிக்கையான பேரா இருக்கே''
''என் முழு பேர், ஸ்கூல்லே ... ஜெக ஜனனி ....
ஆனா செல்லமா ஜூஜூ ன்னு தான் கூப்பிடுவா''
''ஒ, அப்படியா ... ஸோ ஸ்வீட்''
''தேங்க்ஸ் அங்கிள்''
''உங்கப்பா இல்லையா பாப்பா?''
''இல்லை அங்கிள் , அப்பா அம்மா ரெண்டுபேரும் வாக்கிங் போயிருக்காங்க''
'' நீ மட்டும் தான் இருக்கியா?''
''ஆமாம் அங்கிள் ''
''அப்பா எப்போ வருவார்?''
''தெரியாது அங்கிள்''
சரி ... நான் போன் பண்ணினேன்னு சொல்றயா பாப்பா?''
''சரி அங்கிள் .. சொல்றேன்''
''எப்படி சொல்வே?... என் பேர் தெரியுமா?''
''தெரியாதே அங்கிள், நீங்க சொல்லவே இல்லையே''
'' என் பேர் செல்வகணபதி சிற்சபேசன்''
''அங்கிள் அது உங்க பேரா?''
''ஆமாம் ஜூஜூ, திருப்பி சொல்லு பார்க்கலாம்''
''இவ்வளோ நீளம் பேர் இருந்தா எப்படி ஞாபகம் இருக்கும் ... கொஞ்சம் சின்னதா சொல்லுங்க அங்கிள்''
'' என் பேரை சின்னதாக்கினா உங்கப்பாவுக்கு நான் யார்னு புரியாதே ...வேறே யாரோன்னு நினைச்சுக்க மாட்டாரா?''
''சரி திரும்ப சொல்லுங்க அங்கிள்''
''செல்வகணபதி சிற்சபேசன்''
'' செல் வ ....க ....ண .... ''
ஜூஜூ, நீ ஒரு பேப்பர்லே என் பேரை எழுதிக்கோ அப்போ ஞாபகம் இருக்கும்''
''சரி அங்கிள் ... இருங்க பேப்பர் பென்சில் கொண்டுவரேன் ....
இப்போ சொல்லுங்க அங்கிள்''
''எழுதிக்கோ, செல்வ ....கணபதி.....சிற்சபேசன்''
''அங்கிள், செல்வ எப்படி எழுதணும்?''
''செ ...ல் ...வ ... ன்னு எழுதணும்''
''சரி அங்கிள், ஆனா செ எப்படி எழுதணும்?''
'' என்ன ஜூஜூ, உனக்கு வயசென்ன?''
'' எனக்கு அஞ்சு வயசு அங்கிள், ... நாளைக்கு தான் என் அஞ்சாவது பர்த்டே .... என் பர்த்டேக்கு வாங்க அங்கிள்''
'' அதை மொதல்லே சொல்லக்கூடாதா''
''மொதல்லே நீங்க கேக்கலையே அங்கிள்''
''சரி பாப்பா, இப்போ தான் எனக்கு புரியறது ... உனக்கு தமிழ் எழுத தெரியாது ன்னு .... இங்கிலீஷாவது எழுதுவாயா?''
''எனக்கு இங்க்லீஷ் நிறைய தெரியும் அங்கிள் ...
ரைம்ஸ் எல்லாம் சொல்லுவேன் .....
'ஏ பி சி டி .... ஈ எப் ஜி, ....எச் ஐ ஜெ கே ....எல் எம் என் ஓ பி .....
பாபா ப்ளாக் ஷீப் ... ஹம்டி டம்டி ...
எல்லாம் தெரியும் ... சொல்லட்டுமா அங்கிள்''
'' அதில்லே ஜூஜூ, இங்க்லீஷ்லே எழுதத்தெரியுமா? ... ஏ பி சி டி எல்லாம்?''
''ஓ, தெரியும் அங்கிள், ஏ பி சி டி ஈ யெப் ஜி வரையிலும் எழுதுவேன் .. மீதியெல்லாம் எங்க ஸ்கூல்லே இன்னும் சொல்லித்தரலை''
வெறும் ஏ பி சி டி ஈ எப் ஜி யைக் கொண்டு எப்படி செல்வகணபதி சிற்சபேசன் என்று எழுதுவது என்று குழம்பி நின்றார் சிற்சபேசன்.
ஆனாலும் விடுவதாய் இல்லை.
'' சரி பாப்பா, உனக்கு ஒண்ணு, ரெண்டாவது எழுதத் தெரியுமா?''
''ஏன் அங்கிள்?''
''என் போன் நம்பரை எழுதிக்கத்தான் ... உங்க போனிலே காலர் ஐடி இருக்கா ஜூஜூ?''
'' காலர் ஐடி ன்னா என்ன அங்கிள்?''
இப்போது இதை வேறு இழுத்து இன்னும் குழப்ப வேண்டாம் என்று சிற்சபேசன் வேறு மார்க்கம் யோசித்தார்.
''ஹலோ அங்கிள்''
குழந்தையும் விடாமல் கேட்டது.
யாருடனாவது பேச அவ்வளவு விருப்பம்.
அம்மா அப்பா இரண்டு பெரும் அவளுடன் பேசக்கூட நேரமில்லாமல் வேலை, வாக்கிங் என்று பலவகைகளில் தாமே ஏற்படுத்திக்கொண்ட நிர்பந்தங்களில் மூழ்கித் தடுமாற, குழந்தை தன் சாமர்த்தியத்தில் வழி செய்துகொள்கிறது.
இது அவசர யுகக் குழந்தையானாலும் இன்னும் இறுக்கங்களால் பாதிக்கப்படாத, எதற்கும் தயாராய் மிளிரும் நவீனப் பிறவி.
சிற்சபேசன் தொடர்ந்தார்:
''என்னோட நம்பர் சொல்றேன், எழுதிக்கிறயா? ''
''சொல்லுங்க அங்கிள்''
''ரெண்டு நாலு ஒண்ணு மூணு ....''
''அங்கிள், தப்பா சொல்றீங்க ....''
''என்ன தப்பு ஜூஜூ?''
''அங்கிள், ஒண்ணு ரண்டு மூணு நாலு தான் சரி ...நீங்க சொல்றது தப்பு''
''அதில்லை பாப்பா, அது ஒங்க ஸ்கூல்லே சொல்லிக்கொடுத்தது .....நான் சொல்றது என் போன் நம்பர்.
நான் சொல்றபடியே எழுதிக்கோ ....''
''சரி அங்கிள்''
''ரெண்டு நாலு ஒண்ணு மூணு''
''எழுதிட்டேன் அங்கிள்''
''திரும்ப சொல்லு பார்க்கலாம்''
''ரெண்டு நாலு ஒண்ணு மூணு''
''பரவாயில்லையே, ரொம்ப சமர்த்துப் பாப்பா ....
மீதியையும் சொல்றேன் எழுதிக்கறயா?''
''சொல்லுங்க அங்கிள்''
''ஒன்பது ஒன்பது ஆறு எட்டு''
''ஒன்பது எப்படி எழுதணும் அங்கிள்?''
''என்னம்மா, நம்பர் எல்லாம் தெரியும்னு சொன்னயே''
''ஆமா அங்கிள், ....
ஒன் டூ ....பக்கிள் மை ஷூ
த்ரீ போர் ....ஷட் தி டோர்
பைவ் சிக்ஸ் .... பிக்கப் தி ஸ்டிக்க்ஸ்
செவென் எய்ட் ........''
''ஜூஜூ, என்ன சொல்றே நீ''
''எனக்கு ஒன், டூ …… எய்ட் வரை தெரியும்
ஒண்ணு, ரெண்டும் ….. எட்டு வரை தெரியும்
ஒன்பது எப்படி எழுதணும் அங்கிள்?''
சிற்சபேசன் இப்போது குழப்பத்தின் உச்சிக்குத் தள்ளப்பட்டார்.
அந்தக் குழந்தைக்கு அவரது நிலை புரிய வாய்ப்பில்லை.
''பரவாயில்லை ஜூ ஜூ, நானே அப்புறமா போன் பண்ணி அப்பா கிட்டே சொல்லி உனக்கு ஒன்பது எப்படி எழுதணும்னு கத்துத் தரச் சொல்றேன் ...சரியா? ... பை ''
''சரி அங்கிள் ...நீங்க எங்கேருந்து போன் பண்றீங்க அங்கிள்?''
''நான் பேங்க் லேருந்து போன் பண்றேன்''
''ஓ, அம்மா கழுத்தறுக்கற கடன்காரன்னு சொல்வாங்களே அது நீங்கதானா ''
ஐசிஐசிஐ பேங்க் கடன்காரன் போன் பண்ணி லோன் வேணுமான்னு கேட்டுக் கழுத்தறுக்கறான் என்று அம்மா சொன்னதை குழந்தை எப்படிக் கிரகித்துக் கொண்டிருக்கிறது!
இப்போது சிற்சபேசனுக்கு வியர்த்து விட்டது.
''ஜூ ஜூ அது நான் இல்லை ....
நான் வேறே கடன்காரன்''
தான் ஒரு கிரெடிட் கார்ட் தரகன் இல்லை, வெறும் நண்பன் என்று அந்தக் குழந்தைக்கு எப்படிப் புரிய வைப்பது?
கிரெடிட் கார்ட்னா என்ன அங்கிள் என்று கேட்கும் ....
இதற்கு மேல் ஏதும் சொல்லி ஜூஜூ வின் மதிப்பில்
தன்னைத் தாழ்த்திக்கொள்ள சிற்சபேசனுக்கு மனமில்லை.
மறுபடி பை சொல்லி தன் உரையாடலை ஒருவழியாக முடித்துக் கொண்டார்
மறுபடி பை சொல்லி தன் உரையாடலை ஒருவழியாக முடித்துக் கொண்டார்
No comments:
Post a Comment